புதிதாக 143 பேருக்கு கொரோனா வெளிநபர்கள் விழுப்புரத்துக்கு வர தடை
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரிப்பதால் வெளிநபர்கள் விழுப்புரத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரிப்பதால் வெளிநபர்கள் விழுப்புரத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு 1602 ஆக உயர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 1,569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 954 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு கொரோனா மருத்துவமனை, வழுதரெட்டி சுகாதார வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்கள் உள்பட 143 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் நேற்று 39 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 993 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநபர்கள் வர தடை
ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. குறிப்பாக இ-பாஸ் இல்லாமல் விழுப்புரம் நகருக்குள் வர அனுமதிக்க கூடாது என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதையடுத்து விழுப்புரம் நகர எல்லைகளான ஜானகிபுரம், முத்தாம்பாளையம், கோலியனூர் கூட்டுசாலை, மாம்பழப்பட்டு சாலை ஆகிய இடங்களில் போலீசார், பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிநபர்கள் விழுப்புரம் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இ-பாஸ் இல்லையென்றால் திரும்பி செல்லுமாறும் போலீசார் கூறினர். இதனால் பலர் வந்த வாகனங்களிலேயே திரும்பி சென்றனர். இந்த பணியை விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story