கொத்தவால்சாவடியில் இருந்து இடமாற்றம் பிராட்வே பஸ் நிலையத்தில் செயல்பட தொடங்கிய காய்கறி சந்தை
கொத்தவால்சாவடியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு பிராட்வே பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. மேலும் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொத்தவால்சாவடியில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையானது, பிராட்வே பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, பிராட்வே பஸ் நிலையத்தில் நேற்று முதல் காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. இங்கு 130 கடைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறி வாங்க ஏதுவாக தரையில் வட்டங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. வியாபாரிகளிடம் இருந்து இடைவெளியில் காய்கறி வாங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீசாரும் ஒலிபெருக்கி வழியாக கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளை பிராட்வே பஸ் நிலையத்தில் கடை விரித்திருக்கும் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியாபாரிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதும் மருத்துவக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வியாபாரிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொத்தவால்சாவடியில் அறிவிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து மாற்றம் நேற்று அமல்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story