5 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்
5 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய நந்தம்பாக்கம் போலீசாரின் மனிதாபிமான செயலை பலரும் வெகுவாக பாராட்டினர்.
ஆலந்தூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னையில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகள் கவிஷ்கா(வயது 5). இவரது வீட்டின் அருகே சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டு செந்தில்குமார் வசித்து வருகிறார்.
கவிஷ்கா, அடிக்கடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் வீட்டுக்கு சென்று விளையாடி வந்தார். இதனால் அவரது குடும்பத்தில் ஒருவராக மாறினார். சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கவிஷ்காவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கால் கார்த்தியின் பொருளாதார நிலையும் மோசமானது. இதனால் மகளுக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்வது? என்று தெரியாமல் தவித்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீஸ் ஏட்டு செந்தில்குமார், தன்னால் முடிந்த ரூ.30 ஆயிரத்தை கார்த்திக்கிடம் கொடுத்து அறுவை சிகிச்சைக்கு செல்லும்படி கூறினார்.
அத்துடன் நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சிறுமியின் நிலைமை பற்றி தெரிவித்தார். உடனே நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த அனைத்து போலீசாரும் தங்களால் இயன்ற ரூ.45 ஆயிரத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்தையும் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனக்கு தெரிந்த தன்னார்வ அமைப்பாளர்களிடம் இருந்து நிதியாக திரட்டி ஆஸ்பத்திரிக்கு கொடுத்தார்.
நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் செய்த உதவியால் சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சை முடிந்து தற்போது சிறுமி கவிஷ்கா நலமுடன் வீட்டுக்கு திரும்பினார். நந்தம்பாக்கம் போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை பலரும் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story