கொரோனா பரவல் எதிரொலி: தேனியில் இன்று முதல் 13 நாட்களுக்கு கடைகள் அடைப்பு


கொரோனா பரவல் எதிரொலி: தேனியில் இன்று முதல் 13 நாட்களுக்கு கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 14 July 2020 6:20 AM IST (Updated: 14 July 2020 6:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தேனி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 13 நாட்களுக்கு கடைகளை அடைப்பது என்று வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால், ஆண்டிப்பட்டி பேரூராட்சி, போடி நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைகளை முழுமையாக அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேனி நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளித்தது.

தேனி நகரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேனியில், மாவட்ட வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம் மற்றும் சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கம், மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், தேனி நகர ஓட்டல்கள் சங்கம், தேனி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் தேனி நகரில் அதிகரித்து வருவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி வரை நகர் பகுதியில் அனைத்து கடைகளையும் முழுமையாக அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் 13 நாட்களுக்கு தேனி நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட உள்ளன.

இதற்கிடையே தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாளை முதல் வருகிற 22-ந்தேதி வரை 8 நாட்கள் கடைகளை முழுமையாக அடைத்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்பது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Next Story