கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்ற ‘மிஷன் ஜீரோ’ திட்டம் மூலம் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்


கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்ற ‘மிஷன் ஜீரோ’ திட்டம் மூலம் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 July 2020 7:52 AM IST (Updated: 14 July 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்ற ‘மிஷன் ஜீரோ’ திட்டம் மூலம் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் சி.கதிரவன் நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

தமிழகத்தில் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து சிவப்பு மண்டலமாக மாறிய மாவட்டம் ஈரோடு. 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு மரணமும் நிகழ்ந்தது. அதனை பெரும் சவாலாக ஏற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டது. அப்போது ஈரோடு மாநகராட்சி முழுவதும் நடமாடும் மருத்துவக்குழுவினர் சுமார் 25 ஆயிரம் பேரை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினார்கள். இது தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமைந்தது.

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது கட்டமாக 400 என்ற எண்ணிக்கையை தொடும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை மீண்டும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ‘மிஷன் ஜீரோ’ என்ற திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இதற்கான மருத்துவ பரிசோதனை வாகனம் மற்றும் முகாம் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவக்குழுவின் தலைவரும், ஈரோடு சிட்டி ஆஸ்பத்திரி தலைவருமான டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், பிரகாஷ் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘மிஷன் ஜீரோ’ திட்டம் குறித்து மருத்துவக்குழு தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் கூறியதாவது:-

கடந்த முறை ஈரோடு மாநகராட்சியில் 2 நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முறை 5 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒரு வாகனத்துக்கு ஒரு டாக்டர், செவிலியர் மற்றும் மருந்தாளுனர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் காலையில் ஒரு இடத்திலும், மாலையில் இன்னொரு இடத்திலும் பொதுமக்களை நேரில் சந்தித்து காய்ச்சல், சளி பரசோதனை மேற்கொள்வார்கள்.

அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். ஒரு குழுவினர் நாள் ஒன்றுக்கு தலா 1,000 பேரை சந்தித்து பரிசோதனை செய்வது என்று திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி 5 குழுவினரும் சேர்த்து தினசரி 5 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு மருத்துவக்குழுவினரின் பரிசோதனையில் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்கள் ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இதன் மூலம் மிக விரைவாக ஈரோடு மாநகராட்சி முழுவதும் 100 சதவீதம் மருத்துவ பரிசோதனை என்ற இலக்கு நிறைவேற்றப்படும். தற்போது முதல் கட்டமாக ஈரோடு மாநகராட்சி முழுவதும் இந்த நடமாடும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை, சிகிச்சை அளிக் கிறார்கள். மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று இல்லாத வகையில் இந்த குழுவின் தேவை ஏற்பட்டால், மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் தேவையான அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும்.

இந்த இலவச சேவையில் ஈரோடு சிட்டி ஆஸ்பத்திரியுடன் இணைந்து பாரதிய ஜெயின் சங்கத்தினர், ஆதித்யா மசாலா குழும நிறுவனத்தினர் இலவச மருந்துகள் வழங்குகிறார்கள். ஆர்.டி. இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் நடமாடும் மருத்துவக்குழுவுக்கான வேன்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து உள்ளனர். பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்து கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் கூறினார்.

Next Story