அமைப்பு சாரா நல வாரியத்தில் இருந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


அமைப்பு சாரா நல வாரியத்தில் இருந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 14 July 2020 8:37 AM IST (Updated: 14 July 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

அமைப்பு சாரா நல வாரியத்தில் இருந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி டிரைவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனு போட்டனர்.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் போடுவதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு செல்கின்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலக புகார் மனு பெட்டியில் கோரிக்கை மனுக்கள் போட பொதுமக்கள் பலர் வந்தனர்.

அப்போது தமிழ்நாடு உழைப்பாளர் ஓட்டுனர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பெட்டியில் மனு போட்டனர். அதில், கொரோனா ஊரடங்கினால் எங்கள் சங்கத்தில் உள்ள டிரைவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வேலையில்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பதிவு இல்லாத எங்களுக்கு அமைப்பு சாரா நல வாரியத்தில் இருந்து கிடைக்க பெறும் சலுகைகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்டவை அனைத்தும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் புதிய தமிழகம் கட்சியின் பாலாஜி தேவேந்திரன் தலைமையில், இளைஞர்கள் கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்ட மனுவில், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் கடன் தொகை பெற்றுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்கள் தவணை தொகையை திருப்பி செலுத்த அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது.

ஆனால் அந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் தவணை தொகையை கட்டாயப்படுத்தி இரட்டிப்பாக்கி வசூலிக்கிறார்கள். மேலும் பணம் கட்டவில்லையென்றால், அதற்கான வட்டி, அபராதம் சேர்த்து விதிக்கின்றனர். மேலும் புதியதாக கடன் வாங்கியதாக பதிவு செய்கின்றனர். எனவே தனியார் நிதி நிறுவனத்தின் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story