கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றபோது உயிரிழப்பு: தீயணைப்பு வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்


கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றபோது உயிரிழப்பு: தீயணைப்பு வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
x
தினத்தந்தி 14 July 2020 8:56 AM IST (Updated: 14 July 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றபோது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன்(வயது 50) மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஊற்று இல்லாததால், கிணற்றின் பக்கவாட்டில் ஆழ்துளையிட்டு (சைடு போர்), நேற்று முன்தினம் மதியம் வெடி வைத்து வெடிக்கப்பட்டதாம். மாலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(27), பாஸ்கர்(26) கிணற்றில் தண்ணீர் ஊறியுள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது 2 பேரும் கிணற்றில் விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களான ராஜ்குமார்(36), பால்ராஜ்(35), தனபால்(32) ஆகிய 3 பேர் பாதுகாப்பு உபகரணங்களின்றி கிணற்றின் உள்ளே கயிறு கட்டி இறங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் பாஸ்கரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கிணற்றினுள் ராதாகிருஷ்ணனை தேடிக்கொண்டு இருந்தபோது, தீயணைப்பு வீரர் ராஜ்குமார் விஷவாயு தாக்கி கிணற்றினுள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் உடலையும், ராதாகிருஷ்ணனையும் பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் நேற்று காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விஷவாயு தாக்கி கிணற்றில் விழுந்த ஒருவரை காப்பாற்றி, மற்றொருவரை காப்பாற்ற முயன்ற போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் உடல் பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் முன்பு சிறிது நேரம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜ்குமாரின் சொந்த ஊரான தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி கிராமத்திற்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த ராஜ்குமாருக்கு உமா என்கிற மனைவியும், சாய்(4) என்கிற மகனும், மீனாட்சி(7) என்கிற மகளும் உள்ளனர். ராஜ்குமார் 14 ஆண்டுகளாக தீயணைப்பு துறையில் ஆர்வத்துடன் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story