காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு


காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 July 2020 8:58 AM IST (Updated: 14 July 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை,

கோவை உக்கடம் பகுதியிலுள்ள மீன் மார்க்கெட், லாரிப்பேட்டை காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கி கொள்ளலாம். எக்காரணத்தினை கொண்டும் பொதுமக்கள் கூட்டமாக வந்து செல்லக்கூடாது. காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோவையில் தற்போது வரை 71,293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 67 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story