கூடலூரில் புதிதாக 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு


கூடலூரில் புதிதாக 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 9:21 AM IST (Updated: 14 July 2020 9:21 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் புதியதாக 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 41 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டது. அவரை சுகாதாரத்துறையினர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து பத்திரப்பதிவு, கூட்டுறவு வங்கி உள்ள இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கியும் மூடப்பட்டது. இதேபோல் கூடலூர் போலீஸ் நிலையமும் மூடப்பட்டது.

பின்னர் போலீசாரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 29 வயதான போலீஸ்காரருக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு சுகாதாரத்துறையினர் அவரை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் போலீஸ்காரர் வசித்து வந்த பி.எஸ்.என்.எல். குடியிருப்புகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 21 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் வீடுகளை விட்டு வெளியே வர அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதேபோல் கூடலூர் செவிடிப்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதான நபருக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தனர். மேலும் 20 குடும்பங்களை சேர்ந்த 85 பேர் வெளியே நடமாட தடை விதித்தனர். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து கூடலூர் திரும்பியவர்கள் அரசு மகளிர் மற்றும் தனியார் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றனர்.

அவர்களில் பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதனால் அரசு மகளிர் விடுதி மற்றும் தனியார் தங்கும் விடுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட ராஜகோபாலபுரம் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு, செவிடிப்பேட்டை, அரசு மகளிர் மற்றும் தனியார் தங்கும் விடுதி உள்ள பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கூடலூரில் நேற்று ஒரே நாளில் 4 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story