கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 July 2020 3:59 AM GMT (Updated: 14 July 2020 3:59 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை, அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட காட்டேரி, அதிகரட்டி, தாம்பட்டி மற்றும் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட ஏற்காடு நகர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதா, தடை செய்யப்பட்ட பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்று ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே இ பாஸ் தரப்படுவதால், நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு வருபவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் சோதனைச் சாவடிகளில் சுகாதார குழுக்கள் மூலம் உடனடியாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு நோய்த்தொற்று உறுதியானால் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நீலகிரியில் தற்போது 65 தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறையினர் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ பாஸ் பெற்று வருபவர்கள் கட்டாயம் வீடுகளில் சுய தனிமையில் இருக்க வேண்டும்.

முக்கியமாக அரசு தெரிவிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம், துக்க நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீதும், இதை தவிர்த்து இதர நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பெட் போர்டு பகுதி டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கடையில் பணிபுரியும் பணியாளர்களிடம் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், தாசில்தார் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் சகீரா பானு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story