மாயனூர் கட்டளை மேட்டு வாய்க்காலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது


மாயனூர் கட்டளை மேட்டு வாய்க்காலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 14 July 2020 10:22 AM IST (Updated: 14 July 2020 10:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாயனூர் கட்டளை மேட்டுவாய்க்காலில் பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியது.

கரூர்,

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் பிரிந்து செல்லும் வகையில் புதுகட்டளை மேட்டுவாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் அமைக்கப்பட்டு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மேற்கண்ட பகுதிகளை சுற்றி உள்ள 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால்கள் பிரிந்து செல்லும் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர்.

கனரக வாகனங்கள் மட்டும் செல்லாமல் இருந்தன. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு மாயனூர் காவிரி ஆற்றில் ரூ.254 கோடி மதிப்பில் கதவணையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால், புதுகட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால்களின் ஷட்டர்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதுடன், பாலத்தின் மேல் பகுதி சாலைகளும் பழுதடைந்தது.

இதனையடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ், புதுகட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பணிகள் தடைபட்டது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாயனூர் கட்டளை மேட்டுவாய்க்காலின் மேல் புதிதாக பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய பாலம் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, வாகனங்கள் அதன் வழியாக கதவணை சாலைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Next Story