மண்ணச்சநல்லூர் அருகே பயங்கரம்: வங்கி மேலாளர் சரமாரி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்


மண்ணச்சநல்லூர் அருகே பயங்கரம்: வங்கி மேலாளர் சரமாரி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 14 July 2020 11:20 AM IST (Updated: 14 July 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே வங்கி மேலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடி அரிஜன தெருவை சேர்ந்தவர் வண்ணமணி. இவரது மகன்கள் புகழேந்தி(வயது 36), கோவேந்தன் (35). புகழேந்தி திருச்சி தில்லைநகரில் உள்ள ‘யெஸ்’ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர் திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரெயில்வேயில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த உளுந்தங்குடியை சேர்ந்த ரெங்கராஜ் (55), இடப்பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்ணமணி, கோவேந்தன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது வண்ணமணியும், கோவேந்தனும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த கொலையை தொடர்ந்து, வண்ணமணி குடும்பத்தினர் பாச்சூர் என்ற கிராமத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலை உளுந்தங்குடியில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு, பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வண்ணமணி, கோவேந்தன், புகழேந்தி மற்றும் அவர்களது நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் வந்தனர்.

பின்னர் பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு பாச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனுக்கு பின்னால் புகழேந்தி மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். இதனை தெரிந்து கொண்ட ரெங்கராஜ் தம்பி மகன்களான பிரபு(36), பிரபாகர்(31), துரை(28) மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேர் காரில் பின்தொடர்ந்து சென்று கண்ணன் தோப்பு என்ற இடம் அருகே மொபட் மீது காரை மோத செய்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே புகழேந்தி உயிரிழந்தார். சதீஷ்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனால், கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனே, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக உளுந்தங்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பந்தமாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் ஈடுபட்ட பிரபு உள்ளிட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். ரெங்கராஜ் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story