தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1½ லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள்


தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1½ லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள்
x
தினத்தந்தி 14 July 2020 12:18 PM IST (Updated: 14 July 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1½ லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பாக கொரோனா தொற்று காலத்தில் பள்ளி சத்துணவு மாணவர்களுக்கு மே மாதத்தில் உலர் உணவுப்பொருள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி 3 கிலோ 100 கிராம், பருப்பு 1 கிலோ 200 கிராம், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி 4 கிலோ 650 கிராம், பருப்பு 1 கிலோ 250 கிராம் வழங்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்கள் மாணவர்களின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது சத்துணவு மைய அமைப்பாளர்கள் மூலம் உலர் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி முதல் முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி பள்ளிகளில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் 1,603 பள்ளி சத்துணவு மையங்களை சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் 70 ஆயிரத்து 912 பேர், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 72 ஆயிரத்து 404 பேர் என மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 316 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story