சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனு மதுரை கோர்ட்டில் இன்று விசாரணை


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனு மதுரை கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 14 July 2020 1:02 PM IST (Updated: 14 July 2020 1:02 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை,

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த 10-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக அவர்கள் இந்த கொலை வழக்கு குறித்து சாத்தான்குளம், கோவில்பட்டியில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் தங்களது விசாரணையின் ஒரு பகுதியை நிறைவு செய்த சி.பி.ஐ. போலீசார் 4 பேர், நேற்று மாலை 4.30 மணி மதுரைக்கு வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு சென்று, சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்த வழக்கில் கைதானவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்தகுமார், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலீசார் தங்களின் விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுக்க தாக்கல் செய்யும் மனு விசாரணைக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட கைதிகளும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம்.

எனவே இன்றைய விசாரணையின்போது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட போலீசாரை கோர்ட்டில் ஆஜர்படுத்த மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்து வருவார்கள் எனவும் தெரிகிறது. கொரோனா ஊரடங்கை காரணம் காட்டியும், நோய்த்தொற்று பரவல் காரணமாகவும் வீடியோ கான்பரன்சிங் முறையிலும் கைதிகளை சிறையில் இருந்தபடியே கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சி.பி.ஐ. பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு அமைந்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரத்துக்கு உட்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் மதுரை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டிலேயே நடைபெறும். ஆனால் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் நடத்தப்படும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்களை ஆஜர்படுத்துவது, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்வது போன்ற நடைமுறைகள் அனைத்தையும் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு மூலமாகத்தான் சி.பி.ஐ. போலீசார் நிறைவேற்ற முடியும்.

அதன்படிதான் தற்போது சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஆவணங்கள், தடயங்கள், சாட்சியங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அங்கிருந்து இருந்து மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ. தொடர்பான அடுத்தடுத்த கோர்ட்டு நடவடிக்கைகள் அனைத்தும் மதுரையில் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story