ஒரு வாரம் முழு ஊரடங்கு எதிரொலி: தங்கவயலில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் நிறுத்தம்


ஒரு வாரம் முழு ஊரடங்கு எதிரொலி: தங்கவயலில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 July 2020 4:30 AM IST (Updated: 14 July 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஒரு வாரம் முழு ஊரடங்கு காரணமாக தங்கவயலில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

கோலார் தங்கவயல்,

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பெங்களூரு நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பஸ்கள் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டன. மேலும் நேற்று இரவு வரை வெளியூர்களுக்கு பெங்களூருவில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

இன்று (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெங்களூருவுக்குள் நுழைய அனுமதி கிடையாது. கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பெங்களூருவுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பெங்களூருவுக்கு செல்ல மக்கள் விரும்பவில்லை. இதன்காரணமாக தங்கவயலில் இருந்து பெங்களூரு செல்ல கடந்த 2 நாட்களாக குறைந்த அளவு மக்களே பஸ் நிலையத்துக்கு வந்தனர். நேற்று இரவு முதல் ஊரடங்கு தொடங்கியதால், நேற்று தங்கவயலில் இருந்து குறைந்த அளவு பஸ்களே பெங்களூருவுக்கு இயக்கப்பட்டது.

அதாவது நேற்று காலை 5.30 மணி முதல் மாலை 4 மணி வரை வெறும் 45 பஸ்கள் மட்டுமே தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்டது. அதிலும் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர். கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில், பெங்களூருவுக்கு செல்ல மக்கள் யாரும் வராததால் ஏராளமான பஸ்கள் பயணிகளுக்காக காத்து நின்றன. நேற்று மாலை 4 மணிக்கு பிறகு பெங்களூரு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இதேபோல, தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் தனியார் பஸ்களும் நேற்று மாலைக்கு பிறகு நிறுத்தப்பட்டன.

Next Story