பெங்களூருவில், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
பெங்களூருவில், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிர் இழந்தார். பெங்களூருவில் ஏற்கனவே கொரோனாவுக்கு 6 போலீசார் உயிர் இழந்திருந்தனர். தற்போது சப்-இன்ஸ்பெக்டரையும் சேர்த்து பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் (நிர்வாகம்) ஹேமந்த் நிம்பால்கர் தனது டுவிட்டரில், “பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க நகரில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்“, என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story