அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்; தேனி நகர் நெரிசலில் ஸ்தம்பித்தது


அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்; தேனி நகர் நெரிசலில் ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 15 July 2020 5:37 AM IST (Updated: 15 July 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகள் கடைகளை முழுமையாக அடைக்க முடிவு செய்துள்ளதை தொடர்ந்து தேனியில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் தேனி நகர் ஸ்தம்பித்தது.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேனியில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், அரசுத்துறைகள் சார்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், தேனி நகரில் பல்வேறு வியாபாரிகள் சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தி நேற்று முதல் வருகிற 26-ந்தேதி வரை 13 நாட்கள் முழுமையாக கடைகளை அடைக்க முடிவு செய்தனர்.

இதற்கிடையே மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை 8 நாட்களுக்கு கடைகளை முழுமையாக அடைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருவேறு அறிவிப்புகள் எதிரொலியாக தேனி நகரில் நேற்று வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் கடைகள் திறந்து இருந்தன. கடைகள் முழு அடைப்பு எதிரொலியாக நேற்று அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். பெரியகுளம் சாலை, கடற்கரை நாடார் தெரு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நகரில் வாகன போக்குவரத்தும் அதிக அளவில் இருந்தது. இதனால், காலை நேரத்தில் தேனி நகரில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. நெரிசலால் பெரியகுளம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதைகள் அடைக்கப்பட்டு உள்ளன. சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

Next Story