வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு: விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் போராட்டம் - நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது வழக்கு
வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து நாம் தமிழர் கட்சி பிரமுகர் முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தொகுதி செயலாளர் ஆவார். இவர் முகநூலில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வைப்பார் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு உள்ள சாலையில் நேற்று மதியம் பொதுமக்கள் திரண்டு அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் செல்லப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story