சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மனித உரிமை ஆணையம் விசாரணை - போலீஸ் ஏட்டு ரேவதி உடன் வந்ததால் பரபரப்பு
தந்தை-மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சாத்தான்குளத்தில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண் போலீஸ் ஏட்டு ரேவதி உடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அடித்துக் கொலை செய்தனர். இதுதொடர்பாக 10 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் ஏட்டு ரேவதி முக்கிய சாட்சியாக உள்ளார்.
இந்த சம்பவம் நடந்த அன்றே மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை டி.ஜி.பி.-க்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டிற்கு சென்றும் விசாரணை நடத்திச் சென்றனர்.
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் நேற்று மாலையில் சாத்தான்குளத்திற்கு வந்தார். அவருக்கு பாதுகாப்புக்காக 8 போலீசாரும் உடன் வந்தனர். பின்னர் துணை சூப்பிரண்டு குமார், ஜெயராஜ் வீட்டிற்கு சென்று, அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டறிந்து, அவர்கள் தெரிவித்ததை பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணையின் போது, வழக்கில் முக்கிய சாட்சியான ரேவதியும் உடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குமார், உங்களை யார் என்ன செய்தாலும் பயப்படாமல் இறுதிவரை நியாயத்தின் பக்கம் உறுதியோடு இருக்க வேண்டும். உங்களுக்கு நீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் கடைசி வரை துணை இருக்கும் என்று குடும்பத்தினரிடம் கூறிச் சென்றார்.
இதேபோல் பென்னிக்ஸ் நண்பர்களான ராஜாராம், ரவிசங்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி, தகவல்களை பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் சாத்தான்குளம் பஜார் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள பென்னிக்ஸ் கடையை பார்வையிட்டார்.
மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரனிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பின் மனித உரிமை ஆணையம் தங்களது நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story