வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 1:43 AM GMT (Updated: 15 July 2020 1:43 AM GMT)

மன்னார்குடி அருகே வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, சரக்கு ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் அந்த வாகனங்களில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வாகனங்களில் வந்தவர்கள் தப்பி ஓடினர். அதில் 2 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்ட நபர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மன்னார்குடி தாலுகா ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த வைரவன் (வயது31), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் புதுக்கோட்டையில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரவன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, சரக்கு ஆட்டோ, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story