குடியாத்தம் அருக, விவசாயியை கடத்திய 3 பேர் கைது- வாகனங்கள், செல்போன்கள் பறிமுதல்


குடியாத்தம் அருக, விவசாயியை கடத்திய 3 பேர் கைது-  வாகனங்கள், செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2020 3:30 AM IST (Updated: 15 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே விவசாயியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் செதுக்கரை நேருஜி நகரைச் சேர்ந்தவர் சிராஜ் என்கிற சிவராஜ் (வயது 47), விவசாயி. இவரை, 7-ந்தேதி ஒரு கும்பல் ரூ.2 லட்சம் கேட்டு காரில் கடத்தி சென்று, பள்ளிகொண்டாவில் விட்டுச் சென்றனர். குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடத்தப்பட்ட சிராஜ் இரீடியம் விற்பனை செய்வதாகவும், அவரிடம் கோடிக்கணக்கான பணம் இருப்பதாகவும், அவரிடம் இருந்து பணம் பறிக்க ரூ.2 லட்சம் கேட்டு ஒரு கும்பல் கடத்தியதும் தெரிந்தது. இதுதொடர்பாக காட்பாடி தாலுகா மேல்வடுகன்பட்டி மணிவண்ணன் (25), குக்கலபள்ளி முரளி (36), குடியாத்தத்தை அடுத்த ராஜாகோவில் காலனி பாபு (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான பாபு சிராஜின் நடவடிக்கையை கண்காணித்து, அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். அதற்காக மணிவண்ணன், முரளி, பாபுவின் அண்ணன் வெங்கடேசன், சாமுவேல், ராஜ்குமார், மணிவண்ணனின் நண்பர்களான கடப்பா பகுதியைச் சேர்ந்த சுப்பாரெட்டி, சிவாரெட்டி ஆகியோருடன் சேர்ந்து பணம் பறிக்க சிராஜை கடத்தினார்.

ஆனால் சிராஜியிடம் பணம் இல்லை எனத் தெரிந்தும், பணம் கேட்டு கிடைக்காததாலும், போலீசாருக்கு பயந்தும் சிராஜை விடுவித்ததும் தெரிந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன்கள், மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story