ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,223 ஆக உயர்வு


ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா -  பாதிப்பு எண்ணிக்கை 3,223 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 July 2020 3:45 AM IST (Updated: 15 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,223 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,223 ஆக உயர்ந்துள்ளது.

தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூரில் தலா ஒருவர், செங்கம், கலசபாக்கத்தில் தலா 2 பேர், போளூரில் 3 பேர், வந்தவாசி, கீழ்பென்னாத்தூரில் தலா 4 பேர், சேத்துப்பட்டில் 5 பேர், நாவல்பாக்கம், திருவண்ணாமலை நகராட்சியில் தலா 6 பேர், கிழக்கு ஆரணியில் 17 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 62 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போளூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் 33 வயது பெண் ஊழியர், போளூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 53 வயது தலைமை செவிலியர், 49 வயது சமையல்காரர், ஆண்டாள் நகரில் வசிக்கும் தம்பதி, சின்ன கிருஷ்ணாவரத் கிராமத்தில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை தனியார் கல்லூரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, போளூருக்கு வந்த 32 பேரை தாசில்தார் ஜெயவேல் மொடையூர், வெண்மணியில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்.

இதனையடுத்து அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் மேற்பார்வையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story