மும்பையில் இன்று மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


மும்பையில் இன்று மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 July 2020 4:00 AM IST (Updated: 15 July 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இன்று மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மும்பை,

மும்பையில் ஜூலை தொடக்கத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நகரில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தாதா், தாராவி, பரேல் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. தாதர் இந்து மாதா, தாதர் சர்க்கிள், கிங்சர்க்கிள், மாட்டுங்கா பைவ்கார்டன் உள்ளிட்ட இடங்களில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. மாகிம் பகுதியில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல புறநகர் பகுதிகளான மலாடு, காந்திவிலி, சாந்தாகுருஸ், கோரேகாவ், முல்லுண்டு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல நவிமும்பை, தானே பகுதிகளிலும் மழை பெய்தது. மழைக்காரணமாக வாஷி ஏ.பி.எம்.பி. மார்க்கெட் ரோட்டில் தண்ணீர் தேங்கியது.

இந்தநிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது. மும்பை தவிர ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல மத்திய மராட்டியம், மரத்வாடா, கொங்கன் மண்டல பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘புதன்கிழமை மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Next Story