உறவினர் இறந்ததால் எண்ணெய் தேய்த்து ஊரணியில் குளிக்க சென்ற மெக்கானிக் பலி


உறவினர் இறந்ததால் எண்ணெய் தேய்த்து ஊரணியில் குளிக்க சென்ற மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 15 July 2020 8:36 AM IST (Updated: 15 July 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

உறவினர் இறந்ததால் எண்ணெய் தேய்த்து ஊரணியில் குளிக்க சென்ற மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது 42). மெக்கானிக். இவருடைய உறவினர் கடந்த 10-ந் தேதி இறந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று 5-ம் நாள் படையல் போடப்பட்டது. இதற்காக வந்த பங்காளிகள் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். அதன்படி கணேசனும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளிக்க செட்டி ஊரணிக்கு சென்றார்.

ஊரணியில் அவர் குளித்தபோது, பாசியில் வழுக்கி படிக்கட்டில் தலை இடித்தது. மேலும் அவர் ஊரணி தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடலை ஆலங்குடி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story