வெள்ளியணை அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்


வெள்ளியணை அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 July 2020 10:03 AM IST (Updated: 15 July 2020 10:03 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே குளிக்க சென்றபோது, கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி ஊராட்சி, பொரணி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் காவியா (வயது 9). இவள், அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். பொரணி மேற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகள் சுருதி என்கிற கலையரசி (13). இவள், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கலையரசி, காவியா ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுமிகளுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றனர்.

சிறுமிகள் 4 பேரும் கல்குவாரியில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள், நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். அப்போது தங்களை காப்பாற்றும்படி அவர்கள் அபயக்குரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர்.

இதில் 2 சிறுமிகளை மீட்டு மேலே தூக்கி வந்தனர். ஆனால் காவியாவும், கலையரசியும் ஆழமான பகுதியில் மூழ்கியதால், அவர்களை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வெள்ளியணை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வெள்ளியணை போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் உதவியோடு 2 சிறுமிகளையும் தீயணைப்பு வீரர்கள் மேலே தூக்கி வந்து பார்த்தபோது, அவர்கள் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.

பின்னர் அவர்களின் உடல் களை வெள்ளியணை போலீசார், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச்சென்ற இடத்தில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பொரணி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story