மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் கலெக்டர் பேட்டி


மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2020 11:08 AM IST (Updated: 15 July 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் நோயை கட்டுப்படுத்த மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்பே அத்தியாவசிய தேவை என கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் கடந்த மாதம் இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொது போக்குவரத்து தொடங்கியவுடன் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு இ-பாஸ் மூலம் அனுமதி கிடைக்காதவர்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு அனுமதி பெற்று வந்து அங்கிருந்து பஸ்களில் இம்மாவட்டத்துக்குள் வந்துவிட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக உயர தொடங்கி விட்டது. எனினும் மாவட்ட நிர்வாகம் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்ததன் பேரில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு அடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தொடக்க காலத்திலேயே மாவட்ட நிர்வாகம் இம்மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் 4 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களை அமைக்க ஏற்பாடு செய்துவிட்டது. தற்போது பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிவகாசி, கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் உள்ள கல்விநிலைய மையங்களில் 400 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை (இன்று) முதல் அருப்புக்கோட்டையிலும் சிகிச்சை மையம் செயல்பட தொடங்கும். இந்த மையத்திலும் 200 பேர் தங்கி சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது.

இம்மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதிக பாதிப்பு அடைந்த 57 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணிக்க 11 உதவி கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது கண்காணிப்பில் உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனை மையத்தில் தற்போது 3 ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 600 மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை (இன்று) முதல் ஆர்.என்.ஏ. எக்ஸ்பேட் என்ற கருவி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட உள்ளது. இக்கருவி மூலம் சோதனை மாதிரிகளை பரிசோதனைக்கு போடுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதால் தினசரி 1000 மருத்துவ பரிசோதனைகள் செய்ய வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்படாத மருத்துவ பரிசோதனை முடிவுகளை ஓரிரு தினங்களில் அறிவித்துவிட முடியும். இதனைத் தொடர்ந்து தினசரி எடுக்கும் சோதனை மாதிரிகளை அன்றே பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிக்கவும், பாதிப்பு அடைந்தோரை உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும் மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்பு தான் அத்தியாவசிய தேவையாகும். மக்களின் ஒத்துழைப்பே முக்கிய கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகும். தற்போதைய நிலையில் இம்மாவட்டத்தில் நோயின் தீவிரத்தை உணராமல் இன்னும் பலர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி முககவசம் இல்லாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டு வரும் நிலை தொடர்கிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாத நிலை தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

எனவே நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story