பாரசிட்டமால் மாத்திரை விற்க எந்த தடையும் விதிக்கவில்லை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


பாரசிட்டமால் மாத்திரை விற்க எந்த தடையும் விதிக்கவில்லை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 15 July 2020 12:21 PM IST (Updated: 15 July 2020 12:21 PM IST)
t-max-icont-min-icon

பாரசிட்டமால் மாத்திரைகள் விற்பனை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை,

ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி கட்சியின் மதுரை ஒருங்கிணைப்பாளர் ஜோயல்சுகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பாரசிட்டமால் மாத்திரையை டாக்டர்களின் பரிந்துரை இன்றி, மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ள அரசு விதிகள் அனுமதிக்கிறது. இந்த மருந்து, மாத்திரையானது வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகாதவர்களும் சாதாரண காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதனால் பாரசிட்டமால் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, மக்கள் காய்ச்சலில் இருந்து விடுபடுகின்றனர்.

ஆனால் சமீபத்தில் பாரசிட்டமால் மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது என மருந்து கடைகளுக்கு வாய்மொழி உத்தரவாக அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறுகின்றனர். மீறி விற்றால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக மருந்து கடைக்காரர்கள் சொல்கின்றனர்.

பாரசிட்டமால் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு காரணமாக, சாதாரண காய்ச்சலில் இருந்து மீள வழியின்றி பலர் தவிக்கிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகளை வாங்குபவர்களை சுகாதார துறையினர் அழைத்துச் சென்று தனிமைப்படுத்தும் முகாம்களில் வைக்கின்றனர். இதனால் உண்மையிலேயே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை. எனவே மருந்து கடைகளில் பாரசிட்டமால் மாத்திரைகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கவும், தடையின்றி வினியோகம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எபனேசர், “சின்ன சின்ன தொல்லைகளுக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு செல்ல தற்போது வழியில்லை. இந்தநிலையில் காய்ச்சல் நிவாரணியான பாரசிட்டமால் மாத்திரை விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினையில் உள்ளனர்” என வாதாடினார்.

ஆனால் அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வக்கீல் வாதத்தை மறுத்தார். மேலும், “பாரசிட்டமால் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரையின்றி விற்க எந்த தடையும் விதிக்கவில்லை“ என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story