ரூ.33 கோடியில் கட்டப்பட்ட கந்தம்பட்டி மேம்பாலம் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்


ரூ.33 கோடியில் கட்டப்பட்ட கந்தம்பட்டி மேம்பாலம் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 15 July 2020 1:38 PM IST (Updated: 15 July 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலை, ஏ.வி.ஆர். ரவுண்டானா, இரும்பாலை பிரிவு ரோடு, லீபஜார்-செவ்வாய்பேட்டை ரெயில்வே மேம்பாலம், ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகில் இருந்து அஸ்தம்பட்டி வரை மேம்பாலம், குரங்குச்சாவடியில் இருந்து அண்ணாபூங்கா வரை ஈரடுக்கு மேம்பாலம் என மேம்பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாநகரம் மேம்பால நகரம் போன்று காட்சி அளிக்கிறது.

இதனிடையே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் அங்கு புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கொண்டு சென்றார். அதற்கு அவரும் உடனடியாக பரிசீலனை செய்து புதிய மேம்பாலம் கட்ட ரூ.33 கோடியை ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தற்போது மேம்பால பணிகள் விரைவாக முடிவடைந்ததால் இன்று (புதன்கிழமை) கந்தம்பட்டி மேம்பாலம் திறக்கப்பட உள்ளது.

மேம்பாலம் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் கந்தம்பட்டியில் இருந்து சிவதாபுரம் வழியாக இளம்பிள்ளை செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து செவ்வாய்பேட்டைக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இதன்மூலம் கந்தம்பட்டி, சிவதாபுரம், இளம்பிள்ளை, பனங்காடு சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இதே விழாவில் அயோத்தியாப்பட்டணம்-ே- பளூர்க்காடு இடையே ரூ.3 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Next Story