சாத்தான்குளம் அருகே பரபரப்பு: 9 வயது சிறுமி கொடூரக்கொலை - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது;பலாத்காரம் செய்தனரா? என விசாரணை
சாத்தான்குளம் அருகே 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை கிராமம். இங்குள்ள இந்திரா நகர் பகுதியில் ஓடை பாலம் அருகே நேற்று சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சுமார் 9 வயது சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதாவது, இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 19). இவரது நண்பர் நித்தீஸ்வரன் (19). கல்லூரி மாணவரான இவர் நேற்று முத்தீஸ்வரன் வீட்டிற்கு வந்தார். அங்கு வைத்து 2 பேரும் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு 9 வயது சிறுமி டி.வி. பார்க்க வந்தாள். அப்போது அந்த சிறுமி பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும், வீட்டில் இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமியின் உடலை தூக்கிப் போட்டு வெளியே கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள ஓடை பாலம் அருகே டிரம்மை வைத்து விட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமி தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். அவர்கள் ஓலை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் வீட்டில் மின்சாரம் கிடையாது. இதனால் அந்த சிறுமி டி.வி. பார்க்க முத்தீஸ்வரன் வீட்டிற்கு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சாத்தான்குளம் அருகே சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story