மேலும் 2 பேர் உயிரிழப்பு: நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 433 பேருக்கு கொரோனா - தென்காசியில் 17 பேருக்கு தொற்று
நெல்லை, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தென்காசியில் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர பகுதியில் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 110 பேர் ஆவார்கள். இதில் பாளையங்கோட்டை மண்டலத்தை சேர்ந்தவர்கள் 28 பேர். மற்றவர்கள் நெல்லை டவுன், மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,098-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 53 வயது முதியவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், தென்காசி, வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 842-ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆலங்குளத்தை சேர்ந்த 56 வயது முதியவர் கொரோனா தொற்று பாதிப்பால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 90 பேருக்கும், கோவில்பட்டி பகுதியில் 90 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,766-ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story