உடன்குடியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனை-நிதிநிறுவனம் மூடல்
உடன்குடியில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை, நிதி நிறுவனம் மற்றும் மிட்டாய் கடை ஆகியவை மூடப்பட்டன.
உடன்குடி,
உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 30-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று உடன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 47 வயது ஆண் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை அமைந்துள்ள தெருவிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயது ஓட்டுநர், அவரது 44 வயது மனைவி, 17 வயது மகன், 14 வயது மகள் ஆகியோருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் உடன்குடி பஜாரில் உள்ள சுவீட் கடை உரிமையாளரின் 60 வயது மனைவி மற்றும் 3 வயது பேத்திக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த கடை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story