கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்


கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 July 2020 10:15 PM GMT (Updated: 15 July 2020 7:26 PM GMT)

கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர் 8-வது தெரு, டூவிபுரம் 2-வது மற்றும் 3-வது தெருக்கள், மேலசண்முகபுரம் வன்னார் 2-வது தெரு மற்றும் ஸ்பிக்நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் ஆய்வு செய்தார். மேலும் டூவிபுரம் 4-வது தெருவில் உள்ள சங்கரநாராயணன் பூங்காவில் மாநகராட்சி மூலம் காய்ச்சல் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ள நபர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர், டூவிபுரம், மேலசண்முகபுரம் மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், உதவி பொறியாளர் ராமசந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story