சாத்தான்குளத்துக்கு அழைத்து வந்தனர்: கைதான 4 போலீசாரிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை - வேனுக்குள்ளேயே வைத்து பல்வேறு இடங்களுக்கு சென்றதால் பரபரப்பு
தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 4 போலீசாரை சாத்தான்குளம் அழைத்து வந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களை வேனுக்குள்ளேயே வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர்.
அவர்கள் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவில் போலீஸ்காரர் முத்துராஜை மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து முத்துராஜிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பவத்தன்று போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ்காரர் முத்துராஜ் தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளார். அதனால் அவரை தனியாக அழைத்து வந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள், முத்துராஜை அழைத்துக் கொண்டு பென்னிக்ஸ் கடைக்கு சென்றனர். அங்கு வைத்தும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் நள்ளிரவில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 10 அதிகாரிகள், கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை மதுரையில் இருந்து ஒரு வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால், அவர்கள் 4 பேரையும் வேனில் இருந்து கீழே இறக்காமல் வைத்து இருந்தனர்.
இதற்கிடையே, சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் தனியாக ஒரு காரில் வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி, போலீஸ் நிலைய எழுத்தர் பியூலா ஆகியோர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். மேலும் சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு அனில்குமார் வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக இரவில் போலீஸ் நிலையம் வந்தார். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கைதான 4 போலீசாரிடம் வேனில் இருந்தபடியே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் 4 பேரிடமும் சம்பவம் நடந்த அன்று நடந்தது என்ன? என்பது குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
மேலும் தந்தை-மகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தது யார், அவர்களை அடித்தது யார், எப்படி அடித்தீர்கள், எந்த ஆயுதங்களை வைத்து தாக்கினீர்கள் என்பது உள்ளிட்டவை குறித்தும் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்கள். இரவு 8.40 மணிக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காரில் வெளியே வந்தனர். போலீசார் இருந்த வேனும் அவர்களுடன் சென்றது.
சி.பி.ஐ. அதிகாரிகள் ஜெயராஜின் கடை, நீதிமன்றம், யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று கார்களை நிறுத்தி வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். போலீசாரை வேனில் இருந்து கீழே இறக்காததால் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்கள், பேய்க்குளம் வரை சென்று விட்டு மீண்டும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்த அன்று காயம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் வெங்கடேஷ் சிகிச்சை அளித்தார். இதனால் அவரை மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்காக டாக்டர் வெங்கடேஷ் நேற்று மாலையில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story