6 வியாபாரிகளுக்கு கொரோனா; பெரிய மார்க்கெட் மூடல் - நுழைவு வாயில்களுக்கு ‘சீல்’
வியாபாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெரிய மார்க்கெட் மூடப்பட்டு அனைத்து நுழைவாயில் களும் ‘சீல்’ வைக்கப்பட்டன.
புதுச்சேரி,
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் குபேர் அங்காடி என்கிற பெரிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பூ, பழம், காய்கறி, மீன், துணிகள் என அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒரே இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரிய மார்க்கெட்டில் இருந்து புதிய பஸ் நிலையம், தட்டாஞ்சாவடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகிய இடங்களுக்கு காய்கறி கடைகள் மாற்றப்பட்டன. மீன்களை ஏலம் விடுவதும் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
மற்ற கடைகள் தொடர்ந்து பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வருகின்றன. இதையொட்டி அங்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி முகாமிட்டு சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாபாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர். இதை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பெரிய மார்க்கெட் கடை வியாபாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து குபேர் அங்காடியை 48 மணி நேரத்திற்கு மூட மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ் கண்ணா, நகராட்சி ஆணையர் சிவகுமார், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் அங்கு சென்று குபேர் மார்க்கெட்டை மூடினர். முழுவதுமாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 13 நுழைவாயில்களும் ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் கேட்டபோது, ‘குபேர் மார்க்கெட் வியாபாரிகள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கலெக்டர் உத்தரவின்பேரில் குபேர் மார்க்கெட் இன்று (நேற்று) முதல் 48 மணி நேரத்திற்கு மூடப்படும். உரிய பாதுகாப்புக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story