கொரோனா பாதிப்பிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
‘கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்‘ என்றும், ‘ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர்‘ என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வகையில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தாலும், பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், அதேவேளை கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
எனவே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றாலே கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருத்தல் வேண்டும். சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
இதர நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் முதியோரை பாதுகாப்பாக கவனித்து பராமரிக்கவேண்டும். மேற்கண்ட இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமூச்சாக கடைபிடிக்க வேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதையே தவிர்க்க வேண்டும்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனைப் படிப்படியாக உயர்த்தவும், குறிப்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 மடங்கு கூடுதல் மாதிரிகளை எடுக்க அந்தந்த கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை நடவடிக்கைகளில் பொது மக்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.
ஆங்கில மருத்துவத்துடன் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். அதேவேளை இந்திய மருத்துவத்தையும் பயன்படுத்தி நோய் வராமல் தடுக்கவும், நோயால் பாதித்தோரை உடனடியாக குணம் அடையச் செய்வதும் என போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகிறது. இதனால் சென்னை மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இப்போதுதான் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story