கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை - மந்திரி சுதாகர் அறிவிப்பு


கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை - மந்திரி சுதாகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2020 4:30 AM IST (Updated: 16 July 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது. அப்போது கொரோனா பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது பெங்களூருவில் ஊரடங்குக்கு முன்பாக பூத் மட்டத்தில் தனித்தனிக்குழுக்களை உருவாக்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக்காக தேவையான உதவிகளை மாநகராட்சியிடம் இருந்து பெற்று கொள்ளும்படி மந்திரி சுதாகர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 17 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 597 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு தீவிர கண்காணிப்பில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக தாங்களாகவே ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குணமடைந்தவர்கள் தானம் செய்யும் ரத்தம் மூலமாக தான் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடியும். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அரசு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

இதற்கிடையில், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நேற்று மந்திரி சுதாகர் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரிசோதனையை விரைந்து முடிக்கும்படி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஒரு நாளுக்கு 500-க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இன்னும் ஒரு வாரத்திற்குள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான கொரோனா பரிசோதனைகளை நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அதன்படி பரிசோதனையை விரைந்து முடிக்கும்படியும் நிர்வாகிகளிடம் மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Next Story