மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்


மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 July 2020 1:48 AM GMT (Updated: 16 July 2020 1:48 AM GMT)

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இதைத்தவிர 150-க்கும் மேற்பட்ட பூ மாலை கட்டும் தொழிலாளர்கள், மார்க்கெட்டின் ஒரு பகுதியில் மாலை கட்டும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பூ மார்க்கெட் மூடப்பட்டது.

மேலும் பஸ்கள் இயங்காததால் திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டது. இதற்கிடையே மீண்டும் பஸ்கள் இயங்கியதால், பஸ்நிலையம் அருகே காலியாக உள்ள இடத்துக்கு தற்காலிக பூ மார்க்கெட் மாற்றப்பட்டு செயல்படுகிறது. ஆனால், பூ மாலை கட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று பூமாலை கட்டும் தொழிலாளர்கள் ஏராளமானோர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் பூ மாலை கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தரும்படி கேட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூ மாலை கட்டும் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 4 மாதங்களாக வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே, தற்காலிக பூ மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் எங்களுக்கு பூ மாலை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிப்போம் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story