வேலூர், குடியாத்தம், வாணியம்பாடியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர், குடியாத்தம், வாணியம்பாடியில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்.
குடியாத்தம்,
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சிறப்பு வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வேலூரை அடுத்த பெரிய சித்தேரியை சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி பட்டம்மாள் (வயது 72). இவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் மதியம் 12 மணியளவில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் வேலூர் கஸ்பா பயர்லைனை சேர்ந்தவர் பக்ஷி (51) நேற்று முன்தினம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மாலை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குடியாத்தம் டவுன் மதார் சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால்பாஷா (62), டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். இவர்கள் 3 பேர் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த அஸ்கர் (60) 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் அவர் இறந்தார். அவரின் உடல் வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்டு அரசு அதிகாரிகள் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story