இன்று சர்வதேச பாம்புகள் தினம் : மண்புழுக்கள் மட்டுமல்ல, பாம்புகளும் விவசாயிகளின் நண்பன்தான்


இன்று சர்வதேச பாம்புகள் தினம் : மண்புழுக்கள் மட்டுமல்ல, பாம்புகளும் விவசாயிகளின் நண்பன்தான்
x
தினத்தந்தி 16 July 2020 10:49 AM IST (Updated: 16 July 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அது உண்மைதான். கையில் எவ்வளவு பெரிய ஆயுதம் வைத்திருப்பவர் கூட எதிரே ஒரு பாம்பு சீறி வந்தால் அலறி அடித்து ஓடுவார். அதற்கு காரணம் பாம்பின் விஷம்தான். இன்று (வியாழக்கிழமை) சர்வதேச பாம்புகள் தினம்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காராச்சிக்கொரையில் உள்ள கால்நடை டாக்டர் அசோகன் பல ஆண்டுகளாக பாம்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். படுகாயம் ஏற்பட்ட பாம்புகளுக்கு இவர் அறுவை சிகிச்சை செய்தும் காப்பாற்றி உள்ளார்.

சர்வதேச பாம்புகள் தினத்தில் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
உலகில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ!

600 வகைப்பாம்புகளே விஷம் கொண்டவை. இதிலும் 200 வகை பாம்புகளே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டவை.

இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. இவற்றில் நாகப்பாம்பு (நல்லபாம்பு), கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன் என 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி வாழும் தன்மை கொண்டவை.

நாகப்பாம்பு பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்டிருக்கும். எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும். நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது தவறான கருத்தாகும். பெரும்பாலும் உயிர்போய்விடும் என்கிற பயமே மனிதனை கொன்றுவிடுகிறது.

நாகப்பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அது கொன்றவரை பழி வாங்கும் என்பது பொய்யான கருத்து. அது சினிமாவில் காட்டப்படும் கற்பனை.

மண்ணுளிப் பாம்புகளுக்கு 2 தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் வெண்குஷ்டம் வரும். பச்சைப் பாம்பு கண்களை குறிபார்த்து கொத்தும். கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும் இவ்வாரெல்லாம் கூறப்படுவதும் உண்மையல்ல.

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தாலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது.

பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மி.லி. நல்லபாம்பு விஷம் சுமார் 30 ஆயிரம் ரூபாய். கட்டுவிரியன் விஷம் சுமார் ரூ.35 ஆயிரம். கண்ணாடி விரியன் விஷம் ரூ.40 ஆயிரம். சுருட்டை விரியன் விஷம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.

சாரைப்பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவளப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

உழவனின் நண்பன் மண்புழுக்கள் மட்டுமில்லை. பாம்புகளும்தான். நெல் விளைச்சலில் 20 சதவீதத்தை எலிகள் காலி செய்கின்றன. அந்த எலிகளை செலவில்லாமல் பிடித்து தின்று விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க உதவியாக இருக்கின்றன பாம்புகள். சிங்கம், புலியைக் கூட காப்பாற்ற நினைக்கும் விலங்கு ஆர்வலர்கள் கூட பாம்புகளுக்காக வாதாடுவதில்லை. பாம்புகளும் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையுள்ளவைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story