மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை வளாகத்தில் குளத்தில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி பலி உறவினர்கள், தொழிலாளர்கள் போராட்டம்


மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை வளாகத்தில் குளத்தில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி பலி உறவினர்கள், தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2020 12:32 PM IST (Updated: 16 July 2020 12:32 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை வளாகத்தில் குளத்தில் மூழ்கி ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

மணப்பாறை,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள குள்ளம்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 27). இவர், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் 2-வது அலகில் ஒப்பந்த முறையில் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஆலை வளாகத்தில் உள்ள பெரிய குளத்தின் அருகே டிராக்டரின் பின்பகுதியில் புல்வெட்டும் எந்திரத்தை பொருத்தி புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.மாலையில் அவர் பணி முடிந்து திரும்பவில்லை. டிராக்டர் மட்டும் குளத்தின் கரையில் இருந்தது. அதில் அவருடைய பணிக்குறிப்பேடு இருந்தது. இதனால் அவர், குளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகித்த ஆலை நிர்வாகத்தினர், இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் கலைச்செல்வனை தேட முடியாமல் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து நேற்று காலை மீண்டும் கலைச்செல்வனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே கலைச்செல்வன் என்ன ஆனார் என்று தெரியாமல் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆலை முன் திரண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியநாதன்(மணப்பாறை), ரஷ்யா சுரேஷ் (அனைத்து மகளிர்) ஜெயதேவி(துவரங்குறிச்சி) மற்றும் போலீசார் ஆலைவளாகத்தில் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், குளத்தில் மூழ்கி பலியான கலைச்செல்வனின் உடல் மீட்கப்பட்டது. இதையறிந்ததும், அவருடைய உறவினர்கள் அனைவரும் ஓடிவந்து கலைச்செல்வனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து கலைச்செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல போலீசார் முயன்றனர். அப்போது, குளத்தில் மூழ்கி பலியான கலைச்செல்வனின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்றும், அதுவரை கலைச்செல்வனின் உடலை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று கூறி, அவருடைய உறவினர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலைச்செல்வனுக்கு காப்பீடு உள்ளிட்ட தொகைகள் கிடைக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கலைச்செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story