பிறந்தநாள் விழா: விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மரியாதை


பிறந்தநாள் விழா: விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மரியாதை
x
தினத்தந்தி 16 July 2020 8:23 AM GMT (Updated: 16 July 2020 8:23 AM GMT)

காமராஜரின் பிறந்தநாளையொட்டி விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்,

பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாளையொட்டி விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், நூற்றாண்டு விழா மணிமண்டபம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் நேற்று காலை 8 மணிக்கு நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் நூற்றாண்டு விழா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்களம் ராமசுப்பிரமணியம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் காமராஜர் நூற்றாண்டு விழா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ், பா.ஜ.க. சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வணிகர் சங்க பேரவை, சமத்துவ மக்கள்கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்ட கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மைகல்வி அலுவலர் சுபாஷினி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கான இலவச பாடபுத்தகம் வினியோகம் தொடங்கப்பட்டது.

Next Story