மராட்டியத்தின் முதல் பெண் தேர்தல் கமிஷனர் கொரோனாவால் உயிரிழந்தார் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இரங்கல்
மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் தேர்தல் கமிஷனரான நீலா சத்யநாராயண் கொரோனாவால் உயிரிழந்தார். இவருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில முன்னாள் பெண் தேர்தல் கமிஷனர் நீலா சத்யநாராயண். 72 வயதான அவருக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை புறநகர் அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
1972-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரிவை சேர்ந்த இவர் மராட்டியத்தின் முதல் பெண் தேர்தல் கமிஷனர் என்ற புகழை பெற்றவர். சிறந்த நிர்வாக திறமை கொண்ட அவர் கலையிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் சிறந்த பாடகரும் ஆவார். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கிய நிர்வாக பொறுப்பு கொடுக்கப்படாததற்கு எதிராக குரல் எழுப்பியவர்.
இவரின் கணவர் மற்றும் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த முன்னாள் தேர்தல் கமிஷனர் நீலா சத்யநாராயணுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஓய்வில்லாத தனது கடமைகளுக்கு மத்தியிலும் இலக்கிய துறையில் நீலா சத்யநாராயண் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.
நிர்வாக வாழ்க்கை, இலக்கியம் மற்றும் கலை என அனைத்து துறைகளிலும் தனது தடத்தை பதித்த அவரை மராட்டிய மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டிய மந்திரிகள் அசோக் சவான், நவாப் மாலிக், தனஞ்செய் முண்டே, அனில் பரப் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story