கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ: ‘யூ டியூப்’ சேனலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது


கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ: ‘யூ டியூப்’ சேனலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 July 2020 3:45 AM IST (Updated: 17 July 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனலை சேர்ந்த மேலும் ஒருவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

அரியாங்குப்பம்,

கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து, கருப்பர் கூட்டம் ‘யூ- டியூப்’ சேனலில் அவதூறாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், கந்தசஷ்டி பாடலில் ஒவ்வொரு வரியையும் விமர்சித்து பதிவிடப்பட்டு இருந்தது. இதை அறிந்து பா.ஜ.க., இந்து மக்கள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனலை சேர்ந்த சென்னை வேளச்சேரி செந்தில்வாசன் (வயது 49) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரான சென்னை ராயபேட்டையை சேர்ந்த சுரேந்திரன் (36) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர் புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த சுரேந்திரன், அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு தான் சரணடைய விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பெரியார் படிப்பகத்துக்கு சென்றனர். அங்கு பெரியார் சிந்தனையாளர் இயக்க நிர்வாகி தீனா, தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி வீரமோகன் மற்றும் பல்வேறு இயக்கத்தினருடன் சுரேந்திரன் இருந்தார்.

இதுபற்றி சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் புதுவைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுரேந்திரனை கைது செய்து வேனில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.

இதற்கிடையே சுரேந்திரன் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சரணடைய இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story