நிலசீர்திருத்த அவசர சட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது - கர்நாடக அரசு மீது சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
நிலசீர்திருத்த அவசர சட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள தன்னுடைய வீட்டில் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடக அரசு நிலசீர்திருத்த அவசர சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கவர்னர் வஜூபாய் வாலாவும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார். இந்த அவசர சட்டத்தை சட்டசபையில் எந்த ஒரு விவாதமும் நடத்தாமல், அவசர கதியில் அரசு அமல்படுத்தியது எதற்காக என்று தெரியவில்லை. எந்த ஒரு அவசர சட்டத்தையும் சட்டசபையில் விவாதித்து எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் பெற்று தான் நிறைவேற்ற வேண்டும். அரசு அமல்படுத்தி உள்ள இந்த அவசர சட்டத்தால் ஏழை, நடுத்தர விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கு எந்த விதமான ஆதாயமும் கிடைக்க போவதில்லை. இது விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தமாகும்.
விவசாய நிலங்கள் ரியல்எஸ்டேட் அதிபர்கள் கைக்கு எளிதில் கிடைக்கும் வகையில் நிலசீர்திருத்த திருத்த அவசர சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து அரசு அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. பணக்காரர்கள், நில முதலாளிகள், ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கு பயன் அடையும் வகையிலேயே பல்வேறு திருத்தங்களை அரசு செய்திருக்கிறது. இந்த சட்டத்தால் விவசாய நிலங்கள் அழிவு நிலையை நோக்கி செல்லும்.
முதல்-மந்திரி எடியூரப்பா பதவி ஏற்கும் போது தான் விவசாயி என்று தெரிவிப்பதற்காக பச்சை துண்டை தோளில் போட்டு இருந்தார். தற்போது அவர் இந்த அவசர சட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலசீர்திருத்த அவசர சட்டத்திற்கு பின்னால் பல பணக்காரர்கள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் இருக்கிறார்கள். இந்த அவசர சட்டத்தின் மூலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். முறைகேடு நடந்திருப்பது உண்மையானால் கர்நாடகத்தில் மிகப்பெரிய அளவில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஊழலாக இருக்கும்.
கர்நாடகத்தில் கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான மாநில அரசு தவறி விட்டது. கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் கூட முறைகேடு செய்கிறார்கள். நாட்டிலும் சரி, கர்நாடகத்திலும் சரி கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், எடியூரப்பாவும் தவறி விட்டார்கள. இதனை நான் முதலில் இருந்தே கூறி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story