பெண் உள்பட 2 துப்புரவு தொழிலாளர்கள் கொரோனாவுக்கு பலி - சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த பரிதாபம்


பெண் உள்பட 2 துப்புரவு தொழிலாளர்கள் கொரோனாவுக்கு பலி    - சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 16 July 2020 10:15 PM GMT (Updated: 17 July 2020 1:11 AM GMT)

பெங்களூருவில் சரியான சிகிச்சை கிடைக்காமல் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 துப்புரவு தொழிலாளர்கள் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும், அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை கொடுக்காத காரணத்தால் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதுபோல் பெங்களூருவில் சரியான சிகிச்சை கிடைக்காமல் 2 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு தீபாஞ்சலிநகரில் துப்புரவு தொழிலாளியாக ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் குப்பைகளை அள்ளி செல்லும் ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டார். இதையடுத்து, விக்டோரியா ஆஸ்பத்திரி மற்றும் சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அந்த நபரை குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் படுக்கை வசதி இல்லை என்று கூறி அவரை அனுமதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

பின்னர் நேற்று காலையில் அம்பேத்கர் ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உள்ளனர். அங்கும் படுக்கை வசதி இல்லை என்று கூறி முதலில் மறுத்துள்ளனர். பின்னர் போராட்டம் நடத்துவதாக உறவினர்கள் கூறியதை தொடர்ந்து, அந்த நபரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக இறந்து விட்டார். சரியான நேரத்திற்கு அந்த நபருக்கு சிகிச்சை அளிக்காததால் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. முதலிலேயே ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தால், அவர் உயிர் இழந்திருக்க வாய்ப்பில்லை என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதுபோல, நாகேனஹள்ளியை சேர்ந்த 28 வயது பெண்ணும் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்தார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததும், சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்காத காரணத்தால் அந்த பெண் நேற்று உயிர் இழந்துள்ளார். பெங்களூருவில் துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை கிடைக்காமல் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story