‘பிளஸ்-2 தேர்வில் 94.84 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி’


‘பிளஸ்-2 தேர்வில் 94.84 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி’
x
தினத்தந்தி 16 July 2020 10:30 PM GMT (Updated: 2020-07-17T06:41:54+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 94.84 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தூத்துக்குடி, 

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய போது பிளஸ்-2 தேர்வுகள் இறுதிகட்டத்தை நெருங்கி இருந்தன. ஆனாலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் சில தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இக்கட்டான காலகட்டத்தில் நடந்த இந்த தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு உள்ளன.

இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமும், செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமும் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுவதுஇல்லை. இதனால் மாணவ-மாணவிகளிடையே தேர்வு முடிவுகள் குறித்த எந்த பரபரப்பும் காணப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 310 மாணவர்களும், 10 ஆயிரத்து 499 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 809 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 605 மாணவர்கள், 10 ஆயிரத்து 234 மாணவிகள் ஆக மொத்தம் 17 ஆயிரத்து 839 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.84 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 0.61 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 48 பேர் தேர்வு எழுதினர். இதில் 45 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த தேர்வில் மாணவர்கள் 91.52 சதவீதமும், மாணவிகள் 97.48 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.96 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

Next Story