திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று


திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 July 2020 10:15 PM GMT (Updated: 17 July 2020 1:52 AM GMT)

திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் 212 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,559 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 212 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,559 ஆக உயர்ந்துள்ளது.

செங்கத்தில் ஒருவர், பெரணமல்லூரில் 3 பேர், வந்தவாசி, தச்சூரில் தலா 9 பேர், ஆக்கூரில் 11 பேர், தண்டராம்பட்டில் 12 பேர், பெருங்கட்டூரில் 20 பேர், நாவல்பாக்கத்தில் 21 பேர், காட்டாம்பூண்டியில் 22 பேர், கிழக்கு ஆரணியில் 24 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 80 பேர் என மொத்தம் 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனை மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரணி கொசப்பாளையம் அப்பாசாமி தெருவைச் சேர்ந்த 62 வயது நபர், ஆரணி காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அவருக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென இறந்துவிட்டார்.

அவரின் உடலை ஆரணி கமண்டல நாகநதி ஆற்றங்கரை அருகே கொண்டு வந்ததும், நகராட்சி ஊழியர்கள் திடீரென பிணத்தை நாங்கள் அடக்கம் செய்ய மாட்டோம், உறவினர்கள் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி கவச உடைகளை அவரின் உறவினர்களுக்கு வழங்கி பிணத்தை அவர்கள் மூலம் அடக்கம் செய்தனர். இந்தச் சம்பவத்தால் ஆரணி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் தான் அடக்கம் செய்து வந்தனர். இந்தச் சம்பவத்தில் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கூறியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Next Story