பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாவட்டத்தில், 94.51 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாவட்டத்தில், 94.51 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 10:19 AM IST (Updated: 17 July 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 94.51 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்.

கரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வுகளை கரூர் மாவட்டத்தில் 4,729 மாணவர்களும், 5,390 மாணவிகளும் என மொத்தம் 10,119 பேர் எழுதினார்கள். பிளஸ்-2 புதிய பாடத்திட்டத்தின் கீழ், அதாவது 6 பாடங்கள் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமானது. மே மாதம் தொடங்கி, ஜூன் மாதம் இந்த பணி முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும், அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் பட்டியல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தந்த பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விவரங்களை பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் ஒட்டினர். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்கள் 4,363 பேரும், மாணவிகள் 5,200 பேரும் என மொத்தம் 9,563 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி 94.51 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.44 சதவீதம் அதிகம் ஆகும். தமிழக அளவில் கரூர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் 12-வது இடத்தை பிடித்துள்ளது.

Next Story