ஆடி மாதம் பிறப்பு: சேலத்தில், வீடுகளில் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்


ஆடி மாதம் பிறப்பு: சேலத்தில், வீடுகளில் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 July 2020 5:03 AM GMT (Updated: 17 July 2020 5:03 AM GMT)

ஆடி மாதம் பிறப்பையொட்டி, சேலத்தில் பொதுமக்கள் வீடுகளில் தேங்காயை சுட்டு கொண்டாடினார்கள்.

சேலம்,

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று அழைக்கும் வகையில் கோவில்களில் ஆடிப்பண்டிகை கொண்டாட்டம் களை கட்டும். சேலத்தை பொறுத்தவரையில் ஆடி முதல் நாளே இந்த பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி விடும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பண்டிகையை தற்போது எளிதாக கொண்டாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நேற்று ஆடி மாதம் பிறந்ததையடுத்து வழக்கமான உற்சாகத்துடன் இந்துக்கள் தங்கள் இல்லங்களில் ஆடி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பதற்கேற்ப வீடுகளை தூய்மைப்படுத்தி வீடுகளில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தி தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

சேலத்தில் ஆடி மாதம் பிறப்பையொட்டி நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதற்காக அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேங்காய்களை சுடும் அழிஞ்சி குச்சி மற்றும் தேங்காய்களை வாங்கினர். அவ்வாறு வாங்கி வந்த தேங்காயை தரையில் நன்றாக உருட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் தேங்காயில் உள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை, எள், அவல் உள்ளிட்ட பொருட் களை உள்ளே போட்டு மூடினர். பின்னர் வீடுகள் முன்பு நெருப்பு மூட்டி அரை மணி நேரத்திற்கு மேலாக சுட்டனர். நன்றாக சுடப்பட்ட தேங்காயை உடைத்து விநாயகருக்கு படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். 

Next Story