மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி - மாநில அளவில் 5-வது இடத்தை தக்க வைத்தது


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி - மாநில அளவில் 5-வது இடத்தை தக்க வைத்தது
x
தினத்தந்தி 17 July 2020 12:44 PM IST (Updated: 17 July 2020 12:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 96.06 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.09 சதவீதம் அதிகம் என்பதால் மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் 5-வது இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தின் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வெளியிட்டார். அதை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் பெற்றுக்கொண்டார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 566 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். இவர்களில் 18 ஆயிரத்து 796 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.06 ஆகும்.

மாணவர்களை பொறுத்தவரையில் 9 ஆயிரத்து 258 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 813 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.19 ஆகும். மாணவிகளை பொறுத்தவரையில் 10 ஆயிரத்து 308 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 9 ஆயிரத்து 983 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 94.97 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக 1.09 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் கடந்த 3 ஆண்டுகளாக 5-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டும் அதே இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story